திங்கள், 10 ஏப்ரல், 2017

இஸ்லாமிய இதழ்களில் ஆலிம்களின் பங்கு



முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
(துணை ஆசிரியர்: இனிய திசைகள் மாத இதழ்,
இமாம்: மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார், மணலி, சென்னை)

இஸ்லாமியச் சமுதாயத்திற்குத் தம்மால் இயன்ற எழுத்துச் சேவையைச் செய்ய வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் ஒன்றன் பின் ஒன்றாகப் பலர் பருவ இதழ்களைத் தொடங்கினார்கள். அவர்களெல்லாம் தொடக்கக் காலத்தில் மிகுந்த சிரமங்களை மேற்கொண்டும் தம் சொந்தப் பணத்தை முதலீடு செய்தும்தான் இதழ்களைத் தொடங்கினார்கள். அவர்களுள் பலர் இன்றும் மிகுந்த சிரமத்திற்கிடையேதான் தம் இதழ்களை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் நடத்தி வருகின்ற ஒவ்வோர் இதழும் ஒவ்வொரு தனிச்சிறப்புடையது.

இஸ்லாமிய இதழ்களைப் பொறுத்த வரை ஆலிம்களின் பங்கு மிக அதிகமானது எனலாம். ஏனெனில், “எழுதுகோலால் கற்பித்த உன் கண்ணியமான இறைவனின் பெயரால் ஓதுவீராக” (96: 3-4) எனும் இறைவனின் வாக்குமூலத்தைப் படித்துப் பட்டம் பெற்றவர்கள் அவர்கள். ஆகவே அவர்கள் தாம் கற்றதைத் தம் எழுதுகோல்களால் இச்சமுதாயத்திற்குப் பயன்படுமாறு செய்யவே எழுதத் தொடங்கினார்கள்.

மௌலவி அப்துல் மஜீத் பாகவியை ஆசிரியராகக் கொண்டு தொடங்கப்பட்ட மாத இதழான மனாருல் ஹுதா பின்னர் மௌலவி அ. முஹம்மது கான் ஃபாஸில் பாகவி அவர்களை ஆசிரியராகக் கொண்டு மிகுந்த எழுச்சியோடு வெளிவரத் தொடங்கியது. அந்த இதழில் அவர் எழுதுகின்ற ஒவ்வொரு கட்டுரையும் இஸ்லாமிய மக்களிடையே புகுந்துவிட்ட சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கண்டிப்பதாகவே அமைந்ததோடு, மக்கள் மத்தியில் புரையோடிக்கிடக்கின்ற பல்வேறு மூடப்பழக்கங்களைச் சாடுவதாகவும் இருந்தது. இவ்விதழ் தொடர்ந்து இஸ்லாமிய மக்களுக்குத் தன் சேவையை ஆற்றிக்கொண்டிருக்கிறது. அவ்வப்போது இச்சமுதாயத்தில் எழுகின்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்கின்ற விதத்தில் இதன் கட்டுரைகள் அமைகின்றன. காதியானிகள், ஷீஆக்கள் உள்ளிட்ட குழப்பவாத இயக்கங்கள் பல தம் குழப்பமான கருத்துகளை மக்கள் மன்றத்தில் வைக்கும்போதெல்லாம் அவற்றை முறியடிக்கின்ற விதத்தில் அதில் தெளிவான விளக்கங்கள் இருக்கும். அதைப் படித்து மக்கள் தெளிவடைவார்கள். மேலும் இதில் இடம்பெறுகின்ற ‘மௌலானா பதில்கள்’ எனும் பகுதிமூலம் வாசகர்கள் தம் ஐயங்களைக் கேட்டுத் தெளிவடைவார்கள். தற்போது மௌலவி முஹம்மது இப்ராஹீம் பாகவியை ஆசிரியராகக் கொண்டு இவ்விதழ் தனது சேவையைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது.

மௌலவி முஃப்தி அஷ்ரஃப் அலீ அன்வாரி அவர்களை ஆசிரியராகக் கொண்டு மதுரையிலிருந்து வெளிவருகின்ற குர்ஆனின் குரல் மாத இதழ் பல்லாண்டுகளாக இஸ்லாமிய மக்கள் மத்தியில் உலா வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொருவரின் வீட்டிலும் அதனைக் காணலாம். அந்த அளவிற்கு அது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. அதில் இடம்பெறுகின்ற ‘ஐயம் தெளிவு’ பகுதியின் மூலம் பலர் இஸ்லாமியச் சட்டங்கள் குறித்த தம் ஐயங்களைக் கேட்டுத் தெளிவுபெற்றனர்.  பல்வேறு ஆளுமைகள் எழுதுகின்ற ஆக்கங்கள்  அதில் இடம்பெறும். பல்வேறு அரபுக் கல்லூரிகளின் பேராசிரியர்கள் அழகிய தமிழில் எழுதுகின்ற கட்டுரைகள் அந்த இதழுக்குச் சிறப்பாகும். இப்படிப் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த இதழுக்குத் தற்போது அவர்தம் மகனார் முஃப்தி முஹம்மது இஸ்மாயீல் காஷிஃபீ ஆசிரியராக இருந்து செயல்பட்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையைப் போலவே இலட்சியத்தோடு இவ்விதழைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்.

சென்னை பெரம்பூர் ஜமாலிய்யா அரபுக் கல்லூரியின் பேராசிரியர் மௌலவி அப்துர் ரஹ்மான் பாகவியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த உம்மத் மாத இதழ் இந்த இஸ்லாமியச் சமுதாயத்திற்குச் சேவையாற்றியது.  அவர் தம் கல்வியால் கிடைத்த பயனை மக்களுக்குச் சென்றடையச் செய்ய வேண்டும் எனும் நோக்கில் திருக்குர்ஆன் விரிவுரையையும் நபிமொழிகளின் விளக்கத்தையும் அதில் பதிவு செய்தார். மிகப் பயனுள்ள கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டார். அந்த இதழின் சேவையும் குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது. பொருளாதாரச் சிக்கல் காரணமாகத் தற்போது தற்காலிகமாகத் தடைபட்டு நின்றுள்ளது.

மௌலவி அபூஉபைதா பாகவியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமிய்யா’ மாத இதழ் மிகவும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ் முஸ்லிம்கள் வாழும் வெளிநாடுகளிலும் இந்த இதழ் தனது சேவையை ஆற்றியுள்ளது. இதில் இடம்பெற்ற கட்டுரைகள் வாசகர்களின் கவனத்தை ஈர்த்தன; படிப்போரின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பின. தற்போது இது பொருளாதாரச் சிக்கலால் தடைபட்டுள்ளது.

மௌலவி எஸ். என். ஜாஅபர் ஸாதிக் ஃபாஸில் பாகவியை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகின்ற மாத இதழ் சமநிலைச் சமுதாயம். பத்திரிகைகளிலேயே ஒரு தனிப்பட்ட முத்திரை பதித்துள்ளது. சமுதாயத்திற்குச் சேவை செய்து மறைந்த பல்வேறு ஆளுமைகளையும் தெரியாத முகங்களையும் துருவித் துருவி ஆராய்ந்து அவர்களின் சமுதாயத் தொண்டை மக்களுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டியதில் இந்த இதழுக்கு மிக முக்கியப் பங்குண்டு. மேலும் இவ்விதழ் முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் உள்ள பிரச்சனைகளை மக்கள் மத்தியில் கொண்டு வந்து உலக முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுத்த பத்திரிகையாகும்.

இது முஸ்லிம்களால் மட்டுமின்றி மாற்றுமதச் சகோதரர்களாலும் வாசிக்கப்படுகின்ற இதழாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. இதன் சீரிய எழுத்து நடையும் கருத்துகளும் பிறரால் பாராட்டப்பட்டுள்ளன. இவ்விதழ் 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆல்டர்நேடிவ் மீடியா பவுண்டேஷன் வழங்கிய ‘சமூக மாற்றத்தின் குரல்’ எனும் விருதையும், 2013ஆம் ஆண்டு ஆனந்த விகடன் குழுமம் வழங்கிய ‘தமிழகத்தின் சிறந்த சிறுபத்திரிகை’ எனும் விருதையும் 2016ஆம் ஆண்டு ‘எழுத்தாளர் சுஜாதா’ விருதையும் பெற்றுள்ளது இதன் அங்கீகாரத்திற்குக் கிடைத்த வெகுமதியாகும்.

மௌலவி பீர் முஹம்மது பாகவி அவர்களை ஆசிரியராகக் கொண்டு மதுரையிலிருந்து வெளிவந்த சிந்தனைச் சரம் மாத இதழின் சமுதாயப் பணி குறிப்பிடத்தக்கதாகும். இதில் இடம்பெற்ற கட்டுரைகள், கதைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும் இதில் ‘விவாதக் களம்’ எனும் தலைப்பில் சமுதாயத்தில் உள்ள பல்வேறு முக்கியப¢ பிரச்சனைகளை விவாதம் செய்யும்விதமாகக் கட்டுரைகள் அமைந்து மக்களுக்கு மிகுந்த பயனைத் தந்தன. மேலும் இதில் கவிக்கோ அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட பெரும் பெரும் ஆளுமைகள் கட்டுரைகள் எழுதி வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

மௌலவி ஸலாஹுத்தீன் பாகவி அவர்களை ஆசிரியராகக் கொண்டு காஞ்சிபுரம் மாவட்டம் பனையூரிலிருந்து வெளிவருகின்ற இதழ் ‘இஸ்லாமிய இனிய தென்றல்’ ஆகும். இதன் சிறப்பம்சம் சிறு சிறு கட்டுரைகள் நறுக்குத் தெறித்தாற்போல் அமையும். இஸ்லாமியப் பொது அறிவை வளர்க்கும்விதமாக  அவ்வப்போது இதில் பல்வேறு தகவல்கள் இடம்பெறுவதுண்டு. மக்கள் மத்தியில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகச் சேவையாற்றிக்கொண்டிருக்கிறது. மௌலவி முஹம்மது சுலைமான் பாகவி அவர்களை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வெளிவந்த ‘மக்கா சுடர்’ மாத இதழ் குறிப்பிடத்தக்கதாகும். இவர் திருக்குர்ஆன் விரிவுரையில் தேர்ச்சி பெற்றவராக இருந்ததால் தமது இதழிலும் திருக்குர்ஆன் வசனங்களுக்கு விரிவுரையையும் ஆக்கப்பூர்வமான தகவல்களையும் பதிவு செய்தார். அவை மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளவையாக இருந்தன.

மௌலவி அபுல் ஹஸன் ஜாதுலி ஃபாஸில் பாகவி அவர்களை ஆசிரியராகக் கொண்டு திருநெல்வேலியிலிருந்து வெளிவந்த மாத இதழ் ஷமாஅத்துல் உலமா ஆகும். இவர் இவ்விதழ் மூலம் கிறிஸ்தவர்களின் பொய்யான வாதங்களுக்குப் பதிலளித்து பல்வேறு ஆக்கங்களைப் பதிவுசெய்தார். தமது இதழில் ஆக்கப்பூர்வமான ஆக்கங்களை மக்களுக்கு வழங்கி எழுத்துச் சேவையைச் செவ்வனே செய்து வந்தார். அவருக்குப் பின் அவர்தம் மகனார் மௌலவி அப்துர் ரஹீம் பாகவி தொடர்ந்து எழுத்துப் பணியைச் செய்துவருவது போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்குமுரியது.

மௌலவி கலீலுர் ரஹ்மான் பாகவி அவர்களை ஆசிரியராகக் கொண்டு திருநெல்வேலியிலிருந்து வெளிவந்த ‘ரஹ்மத்’ மாத இதழ், மௌலவி எஸ்.கே. கமாலுத்தீன் மதனீ அவர்களை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வெளிவருகின்ற அல்ஜன்னத் மாத இதழ், மௌலவி பீ. ஜெயினுலாபுதீன் உலவி அவர்களை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வெளிவருகின்ற உணர்வு வார இதழ், மௌலவி ஏ.ஆர். ஃபரீதுத்தீன் மஹ்ளரி அவர்களை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வெளிவருகின்ற அஹ்லுஸ் ஸுன்னா மாத இதழ், மௌலவி முஹம்மது காசிம் பாகவி அவர்களை ஆசிரியராகக் கொண்டு மதுரையிலிருந்து வெளிவருகின்ற மறைச்சுடர் மாத இதழ், மௌலவி நூஹுத் தம்பி ஆலிம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு காயல்பட்டணத்திலிருந்து வெளிவருகின்ற முத்துச்சுடர் மாத இதழ், மௌலவி முஹம்மது யூசுஃப் பாகவியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ஸைஃபுல் இஸ்லாம் மாத இதழ், மௌலவி ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களை ஆசிரியராகக் கொண்டு  வெளிவந்த புதிய பயணம் மாத இதழ், மௌலவி முஹம்மது இஸ்மாயீல் நூரி அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த அந்நூர் மாத இதழ், மௌலவி டி.எஸ்.ஏ. அபுதாஹிர் மளாஹிரி அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகின்ற அஸ்ரார் மாத இதழ் உள்ளிட்ட எத்தனையோ இதழ்களை ஆலிம்கள் தொடங்கி நடத்தி வந்துள்ளதும் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆய்வுக்குள் உட்படாத ஆலிம்கள் பலரும் இச்சமுதாயத்திற்காக எழுத்துப் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.

இவை தவிர இன்றும் எத்தனையோ ஆலிம்கள்  பல்வேறு பத்திரிகைகளின் துணை ஆசிரியர்களாக இருந்து எழுத்துச் சேவையாற்றி வருகின்றார்கள். அவர்களுள்  மௌலவி எஸ். வலியுல்லாஹ் ஸலாஹி என்பவர் ‘சமூக நீதி முரசு’ எனும் இதழிலும், மௌலவி ஜஃபருல்லாஹ் நத்வி ‘சமவுரிமை’ எனும் இதழிலும், மௌலவி கே. எம். இல்யாஸ் ரியாஜி  'வைகறை வெளிச்சம்' எனும் இதழிலும், மௌலவி முனைவர்  நூ. அப்துல் ஹாதி பாகவி ‘இனிய திசைகள்’ எனும் இதழிலும் பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

தொடக்கக் காலத்தில் தொடங்கப்பட்ட இதழ்கள் சில பொருளாதாரச் சிக்கல் காரணமாக இடையில் நின்றுபோயின. அவற்றுள் பல இன்றும் தொடர்ந்து சீரிய முறையில் எழுத்துச் சேவையைச் செய்துவருகின்றன. ஆலிம்கள் இச்சமுதாயத்திற்கு எத்துறையிலும் தம் பங்களிப்பை விட்டுவைக்கவில்லை என்பதை அனைவரும் உணர்ந்தே உள்ளனர். ஆலிம்கள் பலர் ஏதேனும் ஒரு பள்ளிவாசலில் இமாமாகப் பணியாற்றிக்கொண்டே எழுத்துச் சேவையையும் செவ்வனே செய்துவருகின்றார்கள். சிலர் அரபுக்கல்லூரிகளில் பேராசிரியர்களாகப் பணியாற்றிக்கொண்டு எழுத்துப் பணியைச் செய்துவருகின்றார்கள். சிலர் பத்திரிகைக்காகவே தம் வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார்கள். ஆக, இவர்கள் அனைவருமே தம் பத்திரிகையை மிகுந்த பொருளாதார நெருக்கடிக்குள்தான் சமாளித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பது கசப்பான உண்மை. “அல்லாஹ்வின் பெயரால் ஓதுவீராக” எனும் இறைவசனத்திற்கேற்ப இன்னும் அதிகமாக வாசகர்கள் படிக்கத் தொடங்கிவிட்டால் இதழ்களை நடத்துவோர் எவ்விதத் தொய்வுமின்றித் தம் பணியைச் செய்யமுடியும் என்பதையும் இவ்விடத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஆலிம்கள் தம் பத்திரிகைகளில் சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கின்ற மூடப்பழக்கங்களுக்கு எதிராகவும்  குழப்பவாதிகள் ஏற்படுத்தும் குழப்பங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும் எழுதிவந்தனர். அவ்வப்போது எழுகின்ற சமூகப் பிரச்சனைகளுக்கான தீர்வையும் அரசியல் ரீதியாக எழுகின்ற பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் எழுதினார்கள். கிறிஸ்தவர்கள் தம் தவறான கொள்கைகளை முஸ்லிம்கள் மத்தியில் பரப்பும்போது அதைத் தடுத்து நிறுத்தும் வகையிலும் எழுதினார்கள். இப்படி எல்லாக் கோணங்களிலும் அவர்கள் தம் எழுத்துப் பணியைச் செய்துவந்தார்கள். தற்போது வரை செய்துகொண்டே இருக்கின்றார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
======================================











கருத்துகள் இல்லை: